சசிகலா வருகையைத் தடுக்க ஜெயலலிதா நினைவிடம் மூடல்? போலீஸ் பாதுகாப்பு..

by எஸ். எம். கணபதி, Feb 3, 2021, 09:47 AM IST

ஜெயலலிதா நினைவிடம் திறந்த சில நாட்களிலேயே பராமரிப்பு பணியைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் எம்ஜிஆர் சமாதிக்கு பின்புறம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.89 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்கா அமைக்க மட்டுமே ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 5 ஆண்டு பராமரிப்புக்கு ரூ9கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுகதரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜன.27ம் தேதியன்று இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஆனால், திறந்த சில நாட்களுக்குள் ஜெயலலிதா நினைவிடம் நேற்று(பிப்.2) முதல் மூடப்பட்டுள்ளது.

அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில், அருங்காட்சியம், அறிவுத்திறன் பூங்கா அமைக்கும் இறுதிகட்டப் பணிகள் நடைபெறுவதால் பொது மக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்ல விடாமல் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அந்த விடுதிக்கு செல்லும் போது ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடி பறக்க விட்டு, பயணம் செய்தார். இதற்கு அதிமுக தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தார். அதிமுக கொடியையோ, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்தையோ சசிகலா பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். அதற்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பதில் அளிக்கையில், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவே உள்ளார்.

அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் அதிமுக கொடியை பயன்படுத்துகிறார். இதில் ஒன்றும் சர்ச்சை இல்லை. சசிகலா தமிழ்நாட்டுக்கு திரும்பியதும் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்என்றார். சசிகலா வரும் 7 அல்லது 9ம் தேதி சென்னைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டமாக அதிமுக நிர்வாகிகள் சிலர், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அவர்களை அதிமுக தலைமை, கட்சியில் இருந்து நீக்கி வருகிறது. இந்த சூழலில்தான் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளது. சசிகலா சென்னை வந்ததும் நேரடியாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று வணங்குவார் என்றும் அதைத் தொடர்ந்து அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு செல்வார் என்றும் அ.ம.மு.க.வினர் தெரிவித்து வந்த நிலையில், தற்போது நினைவிடம் மூடப்பட்டது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

You'r reading சசிகலா வருகையைத் தடுக்க ஜெயலலிதா நினைவிடம் மூடல்? போலீஸ் பாதுகாப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை