சென்னை திரும்பும் சசிகலா தலைமையில், ஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த அ.ம.மு.க. சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டுள்ளது. போலீசார் இதற்கு அனுமதி தருவார்களா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். ஏற்கனவே அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வு விடுதிக்குச் சென்ற போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கொடியைப் பயன்படுத்தியது தவறு என்றும் அதிமுக அமைச்சர்கள் கூறினர்.
மேலும், அவர் திரும்பி வரும் போது அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார் கொடுத்துள்ளனர். சசிகலா தரப்பினரின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் இன்று(பிப்.6) ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், சசிகலா கொடி கட்டியதற்கே கலங்குகிறீர்களே, அடுத்தடுத்து நடக்கப் போகும் சம்பவங்களில் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்கப்பட்டிருந்தது.இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், சென்னை மாநகர போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில்,பிப்.8ம் தேதி சென்னை திரும்பும் சசிகலாவுக்கு போரூர் முதல் மெரினா கடற்கரை வரை 12 இடங்களில் வரவேற்பு அளிக்கவும், ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பேரணி நடத்தவும் அனுமத தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆனால், இந்த மனு நிராகரிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாகக் கூட்டம் கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்று ஏற்கனவே போலீஸ் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும், பேரணியில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற முழு விவரம் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பேரணியில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டு புதிய மனுவைச் செந்தமிழன் அளித்திருக்கிறார். இதை ஏற்று சசிகலாவின் பேரணிக்கு போலீஸ் டிஜிபி திரிபாதி அனுமதியளிப்பாரா அல்லது அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் டிஜிபியிடம் அளித்துள்ள புகாரை குறிப்பிட்டு சட்டம்ஒழுங்கு பிரச்சனையைக் காரணம் காட்டி அனுமதி மறுப்பாரா எனத் தெரியவில்லை.