கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாகத் தங்கரத புறப்பாடு நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிமலை முருகன் கோவிலில் தினமும் மாலை நேரத்தில் மலைமீது தங்கத் தேர்பவனி நடப்பது வழக்கம். மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜை நடத்தப்பட்ட பின்னர் சின்ன குமாரர் தங்கத் தேரில் எழுந்தருளி மலைமீதுள்ள ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் தினமும் நடக்கும். இதற்காக 2000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஏதேனும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் இப்படி பணம் செலுத்தி தங்கத்தேர் இழுத்து முருகனை வழிபடுவர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் தங்கத் தேரோட்டம் நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் முதல் நடத்தப்படவில்லை. தற்போது கொரானா கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் கோவிலில் பல்வேறு வழிபாடுகள், வைபவங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பதினோரு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தேர் புறப்பாடு நிகழ்ச்சியை துவக்க இருப்பதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது இதன்படி வரும் 15 ஆம் தேதி முதல் பக்தர்கள் 2000 ரூபாய் பணம் செலுத்தித் தங்கத்தேர் புறப்பாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.