வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தில் ரூ.2.75 கோடி மதிப்பிலான மின் உதிரிபாகங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, தினமும் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள மின் உற்பத்தி இயந்திரங்களின் பாய்பர், காற்றாடி உள்ளிட்டவை அதிக வெப்பம் ஏற்பட்ட அடிக்கடி பழுதாகி மின் உற்பத்திக்கு தடையாக இருக்கிறது. இதனால், இதற்கு தேவையான அனைத்து உதிரிபாகங்களும் வாங்கி அனல் மின்நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டு இதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையிலும், மின் உற்பத்திக்கு தேவையான அனல் மின் நிலையத்தில் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் பாய்லர், காற்றாடி உள்ளிட்ட ரூ.2.75 கோடி மதிப்பிலான உதிரிபாகங்கள் காணாமல் போனதாக அனல் மின்நிலைய கிடங்கு மேலாளர் மல்லிகார்ஜூனா மீஞ்சூர் போலீசில் புகார் தெரிவித்தார். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வல்லூர் அனல் மின் நிலையம் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு மீறி எப்படி இத்தனை கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் காணாமல் போகும் என்றும், இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.