ராமநாதபுரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் தள்ளிய மூவர் போக்ஸோ சட்டத்தில் போலீஸ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள அரியாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் நேற்று வீட்டில் பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். வெளி ஊர் செல்வதற்காக ராமநாதபுரம் பஸ்டாண்டில் அச்சிறுமி நின்றுள்ளார். அப்பொழுது குழந்தைகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் கும்பலின் தலைவி நீலாவதி என்பவர் சிறுமி தனியாக நிற்பதை நோட்டம் செய்துள்ளார்.
இதை அடுத்து சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை மயக்கி ராமநாதபுரத்தில் இருக்கும் அவரது வீட்டிற்குத் தெரிந்த ஆட்டோ டிரைவர் மூலமாக அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். மனதில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாத நீலாவதி சிறுமியை அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளனர்.அதுமட்டும் இல்லாமல் சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் போலீசுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பொழுது போலீஸ் விசாரித்ததில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்தது உறுதியானது.
இக்கொடுமையான சம்பவத்தில் நீலாவதிக்கு உடந்தையாக இருந்த பஞ்சவர்ணம் மற்றும் ஆட்டோ டிரைவர் பாண்டி ஆகிய மூவரையும் சிறுமியை கடத்தியதற்காகவும் மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காகவும் போக்ஸோ சட்டத்தின் பெயரில் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பல கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கு முடிவு காலம் எப்பொழுது வரும் என்பது கேள்விக் குறியாக மட்டுமே திகழ்ந்து வருகிறது.