Wednesday, Apr 14, 2021

பள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு..

by எஸ். எம். கணபதி Feb 25, 2021, 15:28 PM IST

தமிழகத்தில் இந்த ஆண்டு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடத்தாமல் ஆல் பாஸ் போடப்படும் என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு, பள்ளிக் கல்வித் துறையைச் சீரழிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து கூறியுள்ளனர்.அதிமுக அரசின் பதவிக்காலம் முடியும் தருவாயில் உள்ளது. சசிகலா அணியால் பிளவு, நிகழ்கால பரதன் என்ற பட்டத்துடன் ஓ.பன்னீர்செல்வத்தின் மறைமுக தாக்கு என்ற குழப்பத்தில் அதிமுக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், தேர்தலுக்காகக் கடைசி நேரச் சலுகை அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருகிறார்.சட்டசபையில் இன்று(பிப்.25), பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:கொரோனா காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

பெற்றோர்களிடம் கருத்துக் கேட்டு, ஜன.19ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு விட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன. போதிய நாட்கள் பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. மேலும் கல்வி தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளம் மூலம் மாணவர்கள் கல்வி கற்றதால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 9, 10,11ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு உள்பட எவ்விதமான முழு ஆண்டு தேர்வும் இல்லாமல் ஆல் பாஸ் போடப்படும் என அறிவிக்கிறேன். மதிப்பெண் மதிப்பீடு குறித்து பள்ளிக் கல்வித் துறை விரிவான உத்தரவு பிறப்பிக்கும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்குக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அளித்த பேட்டி வருமாறு:அரசு யாரிடம் கருத்து கேட்டது? எந்த பெற்றோர் கருத்து சொன்னார்கள்? எந்த கல்வியாளர்கள் கருத்துச் சொன்னார்கள். கருத்து கேட்பது என்றால் எஸ் அல்லது நோ சொல்வதல்ல. தீபாவளிக்கு மறுநாள் பள்ளிக் கூடத்தை திறந்ததால், பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு நோய் பரவாதா என்று பெற்றோர் அப்போது பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க கோரிக்கை விடுத்தும் நீண்ட காலம் திறக்கவில்லை. அதே போல், இப்போது 5 மாதம் பாடங்களை ஆசிரியர்கள் வேகமாக நடத்தியிருக்கிறார்கள். ஆனால், தேர்வு கிடையாது என்று அறிவிக்கிறார்கள். தேர்தலுக்காக இப்படி அறிவிப்பது சரியல்ல. அவர்கள் சொல்லும் காரணமும் சரியல்ல. மெட்ரோ ரயில் முழுக்க, முழுக்க ஏ.சி. வசதி கொண்டது.

அதை இயக்குவதற்கு அனுமதிக்கிறார்கள். புறநகர் ரயில்கள் இருபுறமும் ஜன்னலைத் திறந்து விட்டு செல்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள். இதெல்லாம் என்ன லாஜிக் என்று புரியவில்லை. தேர்வுகளை ரத்து செய்வதன் மூலம் பள்ளிக் கல்வியைச் சீரழிக்கிறார்கள்.இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் கூறுகையில், தேர்தல் ஆதாயத்திற்காக இப்படி அறிவிப்பது கல்வியாளர்களுக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. மாணவர்கள் ஏற்கனவே படிப்பை மறந்து விட்டார்கள். இப்போது கொஞ்ச நஞ்சம் படிப்பையும் காலி செய்து விட்டார்கள். யாரைக் கேட்டு இந்த முடிவு எடுத்தார்கள்? பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் இதை விரும்பவே இல்லை. பள்ளி மாணவர்களா ஓட்டுப் போடப் போகிறார்கள்? முதல்வரின் அறிவிப்பு இயற்கைக்கு மாறானது என்றார்.

You'r reading பள்ளிக் கல்வியை சீரழிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு... கல்வியாளர்கள் கொதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை