பெண் எஸ்.பி. பாலியல் புகார்.. நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். சங்கம் வலியுறுத்தல்..

by எஸ். எம். கணபதி, Feb 26, 2021, 12:07 PM IST

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்த வேண்டுமென்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. புகார் கொடுத்துள்ளார். சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் முதல்வர் விசிட் சென்ற போது சிறப்பு டிஜிபியும் சென்றிருக்கிறார். அவர் ஒரு இடத்தில் மாவட்ட பெண் எஸ்.பி.யை பார்த்து நிறுத்தி அவரிடம் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், தன்னுடன் காரில் வந்து அடுத்த பாயிண்டில் இறங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தி அழைத்துள்ளார். உயர் அதிகாரி என்பதால் தட்ட முடியாமல் அந்த பெண் எஸ்.பியும் காரில் ஏறியிருக்கிறார். அந்த சமயத்தில்தான் டிஜிபி அந்த பெண் எஸ்.பி.யிடம் சில்மிஷம் செய்திருக்கிறார்.

இதையடுத்து, கார் ஓரிடத்தில் நின்ற போது அந்த பெண் எஸ்.பி, காரை விட்டு விருட்டென்று இறங்கிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.இதன்பின்னர், அந்த பெண் எஸ்.பி. இது குறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்திருக்கிறார். புகார் கொடுத்தவர் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால், ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்ட விசாகா கமிட்டி தான் புகாரை விசாரிக்க வேண்டும். ஆனால், ஐ.ஜி. ஜெயராம், அந்த பெண் எஸ்.பி.யை மிரட்டி, புகாரை வாபஸ் பெற வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்தல் நேரத்தில் அரசு மீது புகார் வரக் கூடாது என்ற பயந்த அதிமுக அரசு, உடனடியாக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாகா கமிட்டி அமைத்தது. மேலும், ராஜேஷ்தாஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.இந்நிலையில், தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், பெண் எஸ்.பி.யின் புகாரைச் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், விரைவாகவும் விசாரித்து முடிவு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சங்கத்தின் தலைவரும், சென்னை போலீஸ் கமிஷனருமான மகேஷ்குமார் அகர்வால் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே ஐ.ஜி. முருகன் என்ற உயர் அதிகாரி மீது இன்னொரு பெண் அதிகாரி, பாலியல் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் இது வரை முருகன் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பெண் எஸ்.பி. பாலியல் புகார்.. நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். சங்கம் வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை