திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ், மதிமுக கட்சிகள் நீடிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம் பெற்றுள்ளன. இதில், முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, விடுதலை சிறுத்தைகள் 6, இந்திய கம்யூனிஸ்ட் 6 என்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகள் வேண்டுமென்று கேட்டது. அதன்பிறகு 30 வரை இறங்கி வந்தது. ஆனால், திமுக தரப்பிலோ காங்கிரஸ் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்து விட்டது என்று ஒரு கணிப்பைக் கூறி, 15 தொகுதிகளில் ஆரம்பித்து 22ல் நிற்கிறது.
இதனால், காங்கிரஸ் அதிருப்தி அடைந்து ஆலோசனை செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் பல நிர்வாகிகள் தனித்து போட்டியிடலாம் என்று கூறி வருகிறார்கள். ஆனால், எம்.எல்.ஏ. ஆசையில் உள்ளவர்கள், திமுக கூட்டணியை விட்டு வெளியேறக் கூடாது என்று கூறி வருகிறார்கள். அதனால், காங்கிரஸ் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதே போல், மார்க்சிஸ்ட் கட்சி கடந்த 2006ல் பெற்ற 10 தொகுதிகளை தர வேண்டுமென்று கேட்டது. ஆனால், திமுக தரப்பில் 6 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று உறுதியாக கூறி விட்டனர். தற்போது ஒரு சீட் அதிகரித்து தருவது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. இதற்காக மார்க்சிஸ்ட் காத்திருக்கிறது. மதிமுகவுக்கு வெறும் 4 தொகுதிகள்தான் தருவோம் என்று திமுக தரப்பில் கூறி விட்டனர்.
தொண்டர் பலம் சரிந்து விட்டதால் 4 சீட் மட்டுமே தர முடியும் என்று திமுக கூறுகிறது. அதிலும் உதயசூரியன் சின்னத்திற்கு நிற்குமாறு வலியுறுத்துகின்றனர். இதனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தன் கட்சி உயர்நிலைக் குழுவை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், நாளை(மார்ச்7) திருச்சியில் திமுக மாநாடு நடைபெறுகிறது. அதனால் நாளை கூட்டணி கட்சிகளுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம் பெற வாய்ப்பில்லை. எனவே, மார்ச்.8 அல்லது மார்ச் 9ம் தேதிதான் திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளும் தொகுதிகளும் உறுதியாக தெரிய வரும். மார்ச்10ம் தேதி திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடரவிருக்கிறார்.