அனைத்து தொகுதியிலும் அதிமுக டெபாசிட் காலி.. தேமுதிக திடீர் சாபம்..

by எஸ். எம். கணபதி, Mar 9, 2021, 19:19 PM IST

அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் கோபமாக கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தொகுதி உடன்பாடு மேற்கொண்டு விட்டன. வழக்கம் போல், பாமக முதல் கட்சியாக அதிமுகவிடம் பேரம் பேசி, 23 சட்டமன்றத் தொகுதிகளை பெற்றது. அடுத்து பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே சமயம், தேமுதிகவை ஆரம்பம் முதல் அதிமுகவினர் பெரிய பொருட்டாகவே கருதவில்லை. தங்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

அதன்பிறகு 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிக குழுவினர் பேசுகையில், வடமாவட்டங்களில் மட்டுமே பாமக செல்வாக்கு பெற்றிருக்கிறது. எங்கள் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு உள்ளது. எனவே, பாமகவுக்கு சமமாக 23 தொகுதிகள் தர வேண்டும் என்று கேட்டனர். ஆனால், அதிமுக தரப்பில் 10ல் தொடங்கி 13 தொகுதிகள் வரை தருவதாக முன்வந்தனர். கடைசியில், பாஜகவை போல் 20 தொகுதிகளாவது தர வேண்டுமென்று தேமுதிகவினர் கோரினர். ஆனால், அதை அதிமுக ஏற்கவில்லை.

இதையடுத்து, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. இதைத் தொடர்ந்து, எல்.கே.சுதீஷ் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. நாங்கள் கேட்ட தொகுதிகள் தரப்படவில்லை. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என்று எங்கள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமித்த கருத்தாக பேசப்பட்டது. அதனால், அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். தேமுதிக தொண்டர்களுக்கு இன்றுதான் தீபாவளி. அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் அக்கட்சி டெபாசிட் இழக்கும். அதிமுகவின் கே.பி.முனுசாமி, அந்த கட்சியில் உள்ள பாமகவின் சிலீப்பர் செல்லாக இருக்கிறார். அவர் பாமகவின் கொள்கை பரப்பு செயலாளராக அதிமுகவில் இருக்கிறார். இவ்வாறு சுதீஷ் கூறினார்.

You'r reading அனைத்து தொகுதியிலும் அதிமுக டெபாசிட் காலி.. தேமுதிக திடீர் சாபம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை