நான் தலைமறைவாக வேண்டிய அவசியமில்லை: எஸ்.வி.சேகர் பதில்
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து விவகாரத்தில் எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கான பதிலை அவர் தெரிவித்துள்ளார்.
பெண் பத்திரகையாளர்கள் குறித்து தனது பேஸ்புக் கணக்கில் சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் வெளியிட்டார். பெண்கள் குறித்து அவதூறாக பேசிய இவ்விவகாரம் தீயாக பரவியதை அடுத்து பெரும் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து, எஸ்.வி.சேகர் பதிவை நீக்கியதுடன், தவறுதலாக பதிவிட்டதாகவும், இதற்கு பகிரங்க மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
இருப்பினும், பத்திரிகையாளர் சங்கம் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தஜர்.
இதைதொடர்ந்து, எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், எஸ்.வி.சேகர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது.
இந்நிலையில், எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக நேற்று ஊடகங்களில் செய்திகள் பரவியது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.வி.சேகர் பதில் அளித்துள்ளார். அதில், “நான் தலைமறைவாகிவில்லை. தலைமறைவாக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சொந்த வேலை காரணமாக பெங்களூரு வந்துள்ளேன். இன்னும் மூன்று நாட்களில் சென்னை வந்துவிடுவேன் ” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எஸ்.வி.சேகர் சென்னைக்கு திரும்பியதும் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழும்பி உள்ளது.