நான் உண்மையான விவசாயி என்று முதல்வரை மறைமுகமாக கிண்டல் செய்து பிரச்சாரம் செய்கிறார் ஐஜேகே வேட்பாளர் ஒருவர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கூட்டணியில் ஐ.ஜே.கே. சார்பில் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளருர் எம்.எஸ்.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடந்த காலங்களில் திமுக அதிமுக, காங்கிரஸ் என 3 கட்சிகளின் எம்.எல்.ஏ.க எம்.எல்.ஏ.க்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், யாரும் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட்டு தொகுதியை தக்கவைத்திருக்கவில்லை.
இதையே தனது பிரச்சாரத்தில் முன்வைக்கும் ஐ.ஜே.கே வேட்பாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், தான் உண்மையான விவசாயி என்றும் கூறுகிறார். முதலமைச்சரைப் போல் அல்லாமல் தான் இப்போதும் விவசாயியாக இருப்பதாக கூறுகிறார். கலசப்பாக்கம் தொகுதியின் காரப்பட்டில் பிறந்து, இங்கேயே வளர்ந்த இவர் திமுகவில் சேர்ந்து, பின்னர் இந்திய ஜனநாயகக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ள இவர் உள்ளூர்க்காரர் என்பதால், கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:
கலசப்பாக்கம் தொகுதியில் கரும்பு விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. தொகுதியில் விளைந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கரும்புகள், போளூர் தரணி சர்க்கரை ஆலைக்கு விவசாயிகளால் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, இவர்களுக்கு அளிக்க வேண்டிய பணத்தை நிலுவையில் வைத்த ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு பட்டை நாமம் சாத்திவிட்டு ஆலையை இழுத்து மூடிவிட்டு ஓடிவிட்டது.இதில் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய ஆளுங்கட்சி, வாயை மூடிக்கொண்டு பதுங்கிக் கொண்டது. விவசாயிகள் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறார்கள்.
மல்லிகை, சாமந்தி, கோழிக்கொண்ட உள்ளிட்ட பல்வேறு வகை பூக்கள் கலசப்பாக்கம் தொகுதியில் விளைகின்றன. இவற்றை பறித்த அன்றே திருவண்ணாமலை அனுப்ப வேண்டும் அல்லது பெங்களூர் அனுப்ப வேண்டும். இந்த மலர்களை பாதுகாத்து, பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், குளிரூட்டப்பட்ட கிடங்கு ஒன்று அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை. இதுவரை கோலோச்சிய ஆட்சியாளர்களால் அது நிறைவேற்றப்படாததால், ஒரு விவசாயியாக தான் அதை நிறைவேற்றித் தருவேன் என்கிறார் ராஜேந்திரன்.