மேற்கு வங்கத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜகவுக்கு விழுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மே2ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான பாஜக ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது.
இந்நிலையில், முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் 30 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மிட்னாப்பூர் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் திரிணாமுல் கட்சியின் சின்னத்திற்கு வாக்களித்தாலும் விவிபேட் இயந்திரத்தில்(ஒப்புகைச் சீட்டு) பாஜக சின்னத்தைக் காட்டுவதாக புகார் எழுந்தது. எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் விவிபேட் இயந்திரத்தில் பாஜக சின்னமே தெரிவதாக சிலர் புகார் கூறினர்.
இதையடுத்து திரிணாமுல் கட்சியின் ஏஜென்டுகள் வாக்குவாதம் செய்தனர். இதனால், வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பிறகு வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. இது பற்றி, பாஜக மாநில தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், மம்தா பானர்ஜிக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்றார்.
இதற்கிடையே, திரிணாமுல் கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து ஒரு புகார் அளித்தனர். அதில் வாக்குச்சாவடிகளில் அந்தந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டவர்களை மட்டுமே அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகளாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்றும், 2வது கட்ட வாக்குப்பதிவில் அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.