இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. 5 மாதத்திற்கு பிறகு ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று பாதித்துள்ளது.
சீனாவில் இருந்து கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் நவம்பர் மாதம் வரை தினமும் கொரோனா தொற்று தினமும் 70 ஆயிரம், 90 ஆயிரம் பேருக்கு பரவியது. ஜனவரியில் இருந்து கொரோனா தொற்று பரவல் கட்டுப்படத் தொடங்கியது. தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஆனாலும், கடந்த 10 நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. நேற்று(மார்ச்26) ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 62,258 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஒரே நாளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டது நேற்றுதான். இதையும் சேர்த்தால், இது வரை மொத்தம் ஒரு கோடியே 19 லட்சத்து 8910 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. இதில் ஒரு கோடியே 12 லட்சத்து 95,023 பேர் குணம் அடைந்து விட்டனர். தற்போது 4 லட்சத்து 52 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 291 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்தால் இது வரை ஒரு லட்சத்து 61,240 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 37 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நாளை(மார்ச்28) முதல் தினமும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டிலும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. 2 மாதங்களுக்கு முன்பு தினமும் புதிதாக நோய் பாதிப்பவர்கள் எண்ணிக்கை 500க்கும் கீழ் சென்றிருந்தது. ஆனால், ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்து வந்து நேற்று புதிய பாதிப்பு 1971 ஆக உயர்ந்தது. நேற்று உயிரிழந்த 9 பேரையும் சேர்த்து பலி எண்ணிக்கை 12,650 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 11,318 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.