தமிழ்நாட்டுக்குத் தேர்தல் பார்வையாளர்களாக வந்திருந்த கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் ஆணையத்தால் திரும்ப பெறப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக வேறு இரண்டு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
கேரளாவுக்கான ஒதுக்கீட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்ரீராம் வெங்கிட்டராமன் மற்றும் ஆஸிப் கே யூசுப் இருவரும் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பப்பட்டிருந்தனர். இவர்களுள் ஸ்ரீராம் வெங்கிட்டராமன் மேல் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு உள்ளது. கேரளாவைச் சேர்ந்த சிராஜ் என்ற நாளிதழின் திருவனந்தபுரம் தலைமை செய்தியாளர் கே.எம்.பஷீர் மேல் 2019 ஆகஸ்ட் 3ம் தேதி அதிகாலை ஸ்ரீராம் ஓட்டிய கார் மோதி அவர் உயிரிழந்தார். அதற்கான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீராம் வெங்கிட்டராமன் தமிழ்நாட்டுக்கு தேர்தல் பார்வையாளராக அனுப்பப்பட்டுள்ளதை குறித்து சிராஜ் குழுமம் கேரள தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டது. ஆகவே, ஸ்ரீராம் வெங்கிட்டராமன் திரும்ப பெறப்பட்டுள்ளார்.
ஆஸிப் கே. யூசுப், ஐஏஎஸ் தேர்வின்போது போலி ஆவணங்களை காட்டி இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் பணி பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 6 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை பெற இயலாமல் கிரீமி லேயர் என்ற பிரிவினுள் சேர்க்கப்படுவர். ஆஸிப் கே.யூசுப், பெற்றோரின் வருமானத்தைக் குறைத்துக் காட்டி ஓபிசி இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றப் பின்னணி கொண்ட அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக அனுப்புவதை தவிர்க்கும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி ஸ்ரீராம் வெங்கிட்டராமனும், ஆஸிப் கே.யூசுப்பும் திரும்ப அழைக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக Dr.ஷர்மிளா மேரி ஜோசப் மற்றும் ஜாபர் மாலிக் என்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளர்களாக அனுப்பப்பட்டுள்ளனர்.