1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்து வெளியான திரைப்படம் “என் ராசாவின் மனசிலே”. இந்தப் படத்தில் மீனா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிடோர் நடித்திருந்தனர். மீனாவும், வடிவேலும் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.
கிராமத்து பின்னணியில் உருவான இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் மனதை வருடும் பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தன. குயில்பாட்டு, போடா போடா புண்ணாக்கு, பாரிஜாத பூவே, பெண் மனசு ஆழம் என்று, சோல பசுங்கிளியே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.
இந்த படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் ராஜ்கிரணின் மார்க்கெட் உயர ஆரம்பித்தது.
அதன்பின் “பவர் பாண்டி”, “சண்டக்கோழி-2” உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்து வருகிறார்.
இந்நிலையில், “என் ராசாவின் மனசிலே” படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ராஜ்கிரண் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் படம் வெளியாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி ராஜ்கிரண் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “இறைவன் அருளால் என் ராசாவின் மனசிலே படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது. என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்தை எனது மகன் நைனார் முஹம்மது எழுதி இயக்குகிறார். கதையை எழுதி முடித்து விட்டு திரைக்கதையை எழுதுவதில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். வெகு விரைவில் படப்பிடிப்பைதொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இறை அருளால் இப்படமும் மாபெரும் வெற்றியடைய உங்கள் பிரார்த்தனைகளையும், வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்'” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.