கோவில்பட்டியில் சசிகலா.. உற்சாக வரவேற்பு கொடுத்த அமமுக தொண்டர்கள்!

by Sasitharan, Mar 29, 2021, 18:14 PM IST

பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, கடந்த பிப்ரவரியில் விடுதலையாகி சென்னை திரும்பினார். அவருக்கு ஓசூரில் இருந்து சென்னை வரை நீண்ட பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர், தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் சென்னை வந்து சேர்ந்த பிறகு அதிமுக அமைச்சர்களோ, அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியோ அவரிடம் உடல்நலம் விசாரிக்கக் கூட வரவில்லை.

அது மட்டுமில்லாமல், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றும் வெளிப்படையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்மூலம், சசிகலாவை ஒரு செல்லாக்காசு போல் ஆக்கி விட்டதால், சசிகலாவின் ஆதரவாளர்கள் குறிப்பாக டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் கொதித்தனர். ஆனாலும், டி.டி.வி.தினகரனின் அமமுகவும், அதிமுகவும் இணையலாம் என்ற பேச்சு அடிபட்டதால் பொறுமையாக இருந்தனர். அப்படி நடக்கவில்லை. மாறாக அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா அறிவித்தார்.

இந்நிலையில், சசிகலா கடந்த சில நாட்களாக நீண்ட ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். முதலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உறவினர்களின் வீடுகளுக்கு சென்ற அவர், அதன்பிறகு கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்தார். நாகை நாகநாதசுவாமி கோயிலில் ராகு, கேது சன்னதிகளில் சிறப்பு பரிகார பூஜைகளை செய்தார். அடுத்து, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கிறஸ்தவ ஆலயம் என்று மும்மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்றார்.

இதைத் தொடர்ந்து நேற்று(மார்ச்28) ராமேஸ்வரத்திற்கு வந்த சசிகலா, இரவு 7 மணியளவில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கு வந்தார். அங்கு தரிசனத்தை முடித்து விட்டு மீண்டும் ராமேஸ்வரத்திற்கு சென்று தங்கினார். இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்றார்.

இந்தநிலையில் தான் டிடிவி தினகரன் போட்டியிடும் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார் சசிகலா. அப்போது சசிகலாவை பார்க்க மக்கள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் குவிந்தனர். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், டிடிவி தினகரனுக்காக தேர்தல் பணிகளை முன்னின்று நடத்தும் மாணிக்கராஜா தான் சசிகலா தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தார். சசிகலா உடன் இணைந்து அவரும் சாமி தரிசனம் செய்தார்.

இதேபோல் தரிசனம் செய்ய வந்த சசிகலாவை பார்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளர் சி ஆர் சரஸ்வதி சந்தித்து ஆசி பெற்றார். இதேபோல் சசிகலா செல்லும் வழியெங்கும் அமமுக வேட்பாளர்கள் அவரை வரவேற்று ஆசி பெற்று வருகின்றனர்.

You'r reading கோவில்பட்டியில் சசிகலா.. உற்சாக வரவேற்பு கொடுத்த அமமுக தொண்டர்கள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை