கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு இன்று டோக்கன் கொடுத்தாக கூறப்படுகிறது. டோக்கன் கொடுத்த சிலரை பிடித்து போலீசார் காங்கிரஸ் கட்சியினர் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது தேர்தல் ஆணையமோ, காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை கூறி கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் வகாப்பும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்கிடையே கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின் மையிடப்பட்ட விரலை உயர்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது, பாஜக சின்னமான தாமரை சின்னத்தின் பேஜை அணிந்து வாக்குச்சாவடிக்குள் வந்தது தெரியவந்துள்ளது.
வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அரசியல் கட்சியினரின் சின்னங்கள் அடங்கிய நோட்டீஸ் உள்ளிட்டவைகளை கொண்டு வரக்ககூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் இருக்கும் நிலையில், வானதி சீனிவாசன் விதிமுறைகளை மீறியுள்ளார் என புகார் எழுந்துள்ளது. இதனால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.