சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது – நீதிமன்றம் செக்!

by Sasitharan, Apr 8, 2021, 15:53 PM IST

சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரணூர், ஆத்தூர் சுங்கச் சாவடிகளின் ஒப்பந்தக்காலம் 2019ம் ஆண்டு முடிவடைந்து விட்டதால், அந்த வழியில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோசப் சகாயராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமாக இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலிக்க முடியாது என நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். மேலும், ஃபாஸ்டேக் முறை எளிதில் அணுகும் வகையில் இருக்க வேண்டும் எனவும், இதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

சுங்க கட்டண வசூலில் தேசிய அளவிலான கொள்கையை பின்பற்ற வேண்டும் எனவும், சுங்கச்சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், நெடுஞ்சாலைகளில் வாகன நெருக்கம் இல்லாத வகையில் மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

மேலும், அதிக கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சுங்கச்சாவடிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

You'r reading சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது – நீதிமன்றம் செக்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை