கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அனைத்து கடைகளிலும் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள், ஓட்டுநர்கள் அனைவரும் எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், `` வணிக வளாகங்கள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளிலும் பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் செவ்வாய்கிழமை (13.04.2021) அன்றுக்குள் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும்.
45-வயதிற்கு மேற்பட்ட தங்களது பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசியை செலுத்திய பின்னர் இதற்கான ஸ்டிக்கரையும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளுமாறும் தவறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் பலசரக்குகள் கடைகள் முடி சீல் வைக்கப்படும்.
இது அனைத்து மளிகைக் கடைகள், அரிசி மண்டி , நவதானி மண்டி, நகைக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் துணிக்கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளுக்கும் பொருந்தும்.அதேபோன்று அனைத்து தொழிற்சாலைகளிலும், ஹோட்டல்களிலும் 45-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை (13.04.2021) அன்றுக்குள் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும்.
பேருந்துகளில், ஆட்டோக்களில், கால் டாக்ஸிகளில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் (45-வயதிற்கு மேற்பட்டவர்கள்) அனைவரும் எதிர்வரும் செவ்வாய்கிழமை (13.04.2021) அன்றுக்குள் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான சான்றினையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.