தமிழகத்திற்கான 16 வது சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் ஆளுங்கட்சியான அதிமுக நேரடியாக 179 இடங்களிலும், அதிமுக கூட்டணி கட்சிகள் 55 இடங்களிலும் போட்டியிட்டன. எதிர்க்கட்சியான திமுக 173 இடங்களில் நேரடியாகவும், 61 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன.
வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், அதிமுக மற்றும் திமுக தங்களது ஐடி விங்க் மூலம் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டு தெரிந்து கொண்டது.
தமிழகத்தில் அடுத்து திமுகதான் ஆட்சியமைக்கும் என்று திமுக அதீத நம்பிக்கையில் உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களிடம், திமுகதான் ஆட்சியமைக்கும் என கூறிவருவதாக தகவல் கூறுகின்றனர்.
சென்னையில் தந்தை பெரியார் பெயர் கொண்ட ஈ.வெ.ரா. சாலையில் பெயர்பலகையை நெடுஞ்சாலைத் துறை 'கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு' என மாற்றி வைத்துள்ளது. இதற்கு கண்டம் தெரிவித்துள்ள ஸ்டாலின், மீண்டும் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். தாமதம் செய்தால் மே 2 ஆம் தேதிக்கு பின் அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்று, தாங்கள்தான் ஆட்சியமைப்போம் என்பதை சூசகமாக கூறியிருக்கிறார்.
ஸ்டாலினின் நம்பிக்கை பேச்சோடு நிற்காமல், அடுத்து அமைய இருக்கும் ஆட்சியின் அமைச்சர்கள் யார் யார் என்ற பட்டியலையும் தயார் செய்துள்ளதாக திமுக உயர்மட்ட நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுகிறது.
எதுவாக இருப்பினும், சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2 ஆம் தேதி தெரியவரும்.