உலக புத்தக தினத்தையட்டி கன்னிமாரா நூலகத்தில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மற்றும் அபூர்வமான புத்தகங்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
சர்வதேச புத்தக தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளான ஏப்ரல் 23ம் தேதி சர்வதேச புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தினத்தையட்டி சென்லை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் பழமையான மற்றும் அபூர்வமான நூல்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
நாளை (புதன்கிழமை) வரை நடைபெறும் கண்காட்சியில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 1548ம் ஆண்டு கிரேக்க லத்தீன் மொழியில் வெளியான ‘பிளட்டோவின் தத்துவங்கள்’, 1553ம் ஆண்டின் மருத்துவ புத்தகம், 1608ம் ஆண்டின் பைபிள், 1698ம் ஆண்டின் குரான், 1781ம் ஆண்டு வெளியான ‘ஞான முறைமைகளின் விளக்கம்’, 1822ம் ஆண்டு வெளியான ‘இமயமலையில் உள்ள தாவரங்கள்’, ‘மதுரா’ போன்ற புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியின் சிறப்பாக 85 செ.மீ நீளமும், 60 செ.மீ அகலமும் கொண்ட இந்தியா&ஆசியா வரபடங்கள் அடங்கிய மிகப்பெரிய நூல் ஆகும்.
இந்த புத்தக கண்காட்சியை சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், குழந்தைகள், பெற்றோர், பொதுமக்கள் என பலர் நூலகத்துக்கு வந்து பழமையான நூல்களை பார்வையிட்டு செல்கின்றனர். இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.