கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், புதன்கிழமை (ஏப்ரல் 14) சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார்.
சகாயம் அரசியல் பேரவை என்ற பெயரில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான அணி களமிறங்கியது. 20 தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறங்கினர்.இதையொட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக, கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்துவிட்டு சென்னை திரும்பியவர், கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.
தொடர்ந்து காய்ச்சல் குறையாமல் இருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.அதன் முடிவில், `கொரோனா பாசிட்டிவ்' என வந்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவர்களின் முழுகண்காணிப்பில் இருந்தார் சகாயம்.
இதைத் தொடர்ந்து ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே சென்றது. மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூடியதால் சகாயத்தின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, தனி மருத்துவ குழு ஒன்று சகாயத்துக்கு தீவிர சிகிச்சை அளித்தது. இதன் பலனாக பத்து நாள்களைக் கடந்த பிறகு கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டார்.
இன்று காலை அவருக்கு மூன்றாவது முறையாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் `நெகட்டிவ்' என முடிவு வந்தது. அவரது ரத்த அழுத்தமும் சீராக இருந்தது. மேலும், சர்க்கரையின் அளவும் 360 என்ற அளவில் இருந்து 220 ஆக குறைந்து விட்டது பரிசோதனையில் தெரிய வந்தது.
` என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டீர்கள். மக்களுக்காக உழைக்கும் உங்களின் பணி சிறப்பாக இருக்கிறது' என்றார். தொடர்ந்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நலனுக்காக ரூ.10,000 நன்கொடையையும் அளித்தார்.