கொரோனா இரண்டாவது அலை கைமீறி செல்லவில்லை – ராதாகிருஷ்ணன் விளக்கம்!

by Madhavan, Apr 15, 2021, 15:36 PM IST

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை கையை மீறி செல்லவில்லை என்று சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கைமீறி சென்றுவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இது தவறான தகவல் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உடன் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ``மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கையை மீறி செல்லவில்லை என கூறினார். மேலும், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விட்டதாக அரசு காலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நீதிமன்ற விசாரணையின்போது சமமந்தப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

எந்தெந்த துறைகளில் எல்லாம் வீட்டில் இருந்து பணி செய்ய முடியுமோ, அவர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவித்த அவர், பணி செய்யும் இடங்கள், மக்கள் கூடும் இடங்களில் மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும், நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருப்கதாகவும், தடுப்பூசி போட்டவர்களும் கபசுர குடிநீர் எடுத்து கொள்ளலாம் என தெரிவித்தார்..

உலகளவில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று வந்திருப்பதாகவும், தமிழகத்தில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அதன் வீரியம் குறைவாகவே இருக்கும் என தெரிவித்தார்..

சென்னையில் பொதுமக்கள் தாங்களாகவே ஓமாந்தூரார் மற்றும் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் செல்வதால் தான் படுக்கை நிரம்பியதை போன்ற தோற்றம் ஏற்படுவதாகவும், சென்னையின் மற்ற மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், சென்னையில் 19,422 படுக்கைகளும், மாநில அளவில் 83,376 படுக்கைககளும் தற்போது தயாராக உள்ளதாகவும்,

முதலமைச்சர் அடுத்த 10 நாட்களில் மூடப்பட்ட கோவில் கட்டுப்பாட்டு மையங்களை திறக்க உத்தரவிட்டுள்ளதால் படுக்கைகளின் எண்ணிக்கை ஏற்கனவே இருந்தது போல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் ஆக அதிகரிக்கும் என தெரிவித்தார்

You'r reading கொரோனா இரண்டாவது அலை கைமீறி செல்லவில்லை – ராதாகிருஷ்ணன் விளக்கம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை