அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ததில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், என்ஜினியரிங், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட் நீதிபதிகள், அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என தெரிவித்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ததில் தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இந்த தேர்வு அடுத்த மாதம் ஆன்லைன் மூலம் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பு முடிவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப்-லைன் மூலமாகவோ அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்றும், தேர்வு நடத்தும் தேதி குறித்து பல்கலைகழக மானிய குழுவின் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சான்றிதழ்களை 8 வாரத்துக்குள் விரைந்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.