ஸ்டாலின் நினைத்து இருந்தால் முதல்வராகி இருக்கலாம் இனி ஒருபோதும் முடியாது - விஜயகாந்த் அதிரடி

ஸ்டாலின் உட்பட்டு அதிகார பங்கீடுக்கு ஒப்புக் கொண்டிருந்தால், 2016ல் ஸ்டாலின் முதல்வராகி இருக்கலாம். இனி எப்போதும் ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

by Lenin, Apr 24, 2018, 17:09 PM IST

ஸ்டாலின் உட்பட்டு அதிகார பங்கீடுக்கு ஒப்புக் கொண்டிருந்தால், 2016ல் ஸ்டாலின் முதல்வராகி இருக்கலாம். இனி எப்போதும் ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டியில், ஏன் நீங்கள் ஸ்டாலினை எதிர்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “எனது கொள்கை ஸ்டாலினுடன் எப்போதும் ஒத்துப் போவதில்லை. மற்றவர்கள் கலைஞர் கருணாநிதியை சந்திக்க நினைப்பதற்கு முன், நான் கருணாநிதியை சந்திக்க விரும்பினேன். அவரை சந்திக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால், அது நடக்கவில்லை. முடிவில் ஸ்டாலினுடன் தான் இதுகுறித்து பேச வேண்டும் என்றார்கள்.

கடந்த வருடம் தீபாவளி நேரத்தின் போது, ஸ்டாலின் தரப்பில் இருந்து எனக்கு போன் செய்யப்பட்டது. கருணாநிதியை சந்திப்பது குறித்து மீண்டும் தொடர்பு கொள்கிறோம் என்றார்கள். அதற்காக நான் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒருநாள் அவர்கள் தொடர்பு கொண்டு, ‘இன்று சூரசம்ஹாரம் உள்ளது. ஆகையால், இன்று சந்திக்க உகந்த நாள் இல்லை’ என்றார்கள்.

அதுவும் சரி தான் என நினைத்தேன். ஆனால், அதன் பிறகு அங்கிருந்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. எனக்கும் அத்தோடு கலைஞரை சந்திக்கும் ஆர்வம் போய்விட்டது. மற்றவர்களுக்கு முன்பாக நான் கலைஞரை சந்திக்க விரும்பிய போது, திட்டமிட்டே ஸ்டாலின் எங்கள் சந்திப்பை தடுத்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ஸ்டாலின் அவ்வாறு செய்ததற்கு காரணம் 2016 தேர்தலில் அவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கவில்லை என்பதற்காகவா?’ என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள விஜயகாந்த், “ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார் என்று தெரியவில்லை. கலைஞரை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரிக்கவே விரும்பினேன். 2016 தேர்தலின் போது, ஸ்டாலின் தரப்பில் இருந்து ஆட்கள் என்னை அணுகி, கூட்டணிக்காக பேசினார்கள். நாங்களும் அதில் ஆர்வமுடன் தான் இருந்தோம்.

நாங்கள் கேட்கும் சீட்டை கொடுத்துவிட்டால், கூட்டணி வைக்கலாம் என நினைத்திருந்தோம். பேச்சுவார்த்தையின் போது நாங்கள் 60 சீட் கேட்டோம். அவர்களோ 40 சீட் தான் கொடுக்க முடியும் என்றனர். அன்றே, எங்களது நிபந்தனைகளுக்கு ஸ்டாலின் உட்பட்டு அதிகார பங்கீடுக்கு ஒப்புக் கொண்டிருந்தால், இந்நேரம் இருவர் பக்கமும் அமைச்சர்கள் இருந்திருப்பார்கள்.

2016இல் ஸ்டாலின் முதல்வராக அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அன்று அந்த வாய்ப்பை அவர் இழந்துவிட்டார். இனி எப்போதும் ஸ்டாலினால் முதல்வர் ஆக முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஸ்டாலின் நினைத்து இருந்தால் முதல்வராகி இருக்கலாம் இனி ஒருபோதும் முடியாது - விஜயகாந்த் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை