பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க வரும் மே மாதம் 3ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வுகள் முடிந்து வரும் மே மாதம் 16ம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனால், பல்வேறு படிப்புகளின் கீழ் படிக்க மாணவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் 152704 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதும் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மொத்த காலி இடங்கள் மே 15ம் தேதி அன்று தெரியும்.
பொறியியல் படிப்புக்காக இணையதளங்களில் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வரும் 29ம் தேதி வெளியிடப்படும். மே 3ம் தேதி முதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் இணையதளங்களில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்வதற்கு மே 30ம் தேதி கடைசி நாள்.
ஆன்லைன் விண்ணப்பத்தின் ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப தேவையில்லை. விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்காக தமிழகம் முழுவதும் 42 மையங்கள் திறக்கப்படும். இந்த உதவி மையங்களில் கணினிகள் அச்சுப் பொறிகள், பயிற்சி பெற்ற நபர்கள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் இருக்கும் மையங்களில் பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது. சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் சில நாட்கள் தள்ளிப்போனாலும் கலந்தாய்வில் பாதிப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.