'சின்னம்மா' என்ற ஒற்றை வார்த்தைக்காக நாங்கள் எதையும் பொறுத்துக் கொள்வோம் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஜெய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது நெருங்கிய தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார். அதன் பிறகு சசிகலா குடும்பத்திற்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியானதில் இருந்து அவர்களது நடவடிக்கையில் வெளிப்படையாக தெரிகிறது. திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனது முகநூல் பக்கத்தில், “மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில், “மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சின்னம்மா அவர்கள் சிறைக்கு சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கும் மத்தியில் கழகத்தை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் துணைபொதுச்செயலாளர் அண்ணன் TTV தினகரன் செயலாற்றி வருகிறார்…
ஆனால்,, எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திரு. திவாகரனும், ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது… சின்னம்மாவின் மீது சுமத்தப்பட்ட பொய்யான வீண்பழிகளையும், தங்கள் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பழி சொற்களையும் அண்ணன் தினகரன் கழகத்தை தலைமையேற்று நடத்திய இந்த காலகட்டத்தில் தான் முறியடிக்க முடிந்தது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.
தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதிர்கள்… நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், “கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நானும் எனது மகனும் ஈபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். முதல் அமைச்சர் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
வெற்றிவேல், செந்தில் பாலாஜி கட்சிக்கு இடையில் வந்தவர்கள். அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலில் தனித்து நிற்போம். அதிமுகவின் சுவடே இருக்க கூடாது என தினகரன் நினைக்கிறார். திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது” என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தினகரன் அணியைச் சார்ந்த வெற்றிவேலுக்கு திவாகரன் மகன் ஜெயானந்த் எழுதியுள்ள கடிதத்தில், ''எங்களைப் பற்றி தாங்கள் பதிவிட்டிருப்பது எங்களை கோபப்படுத்தவில்லை. ஆனால், மிகுந்த மன வருத்தத்தை அளித்திருக்கிறது. கழகத்தின் முக்கிய உறுப்பினரான நீங்கள் எங்கள் நிலை உணராமல் இருப்பது எனக்கு வருத்தமே. நாங்கள் எடப்பாடி அணியினரோடு நெருக்கமாக இருக்கிறோம் என்று நீங்கள் கூறியது தவறு.
எங்கள் குடும்பத்தைச் சார்ந்த உறவினரை கரூரில் இருந்து வேலூருக்கு மாற்றி பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறார் எடப்பாடி. எங்கள் குடும்ப உறுப்பினர் என்பதால்தானே இந்த நடவடிக்கை. இந்த சம்பவம் நடந்து ஒருவாரம் கூட ஆகவில்லை. இதுபோல பல சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.
நாங்கள் அரசியலில் உங்களுடன் பயணித்ததால்தானே பாஜக எங்களைப் பணியவைக்க கடந்த 8 மாத காலமாக வருமான வரித்துறை மூலம் எங்கள் குடும்பத்திற்கும், எங்களைச் சார்ந்தோர்களுக்கும் மிகுந்த இன்னல்களையும், இம்சைகளையும் கொடுத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? 72 மணிநேரம் என் வீட்டில் தங்கி என்னை அடிக்க வருவது போல பாவனைகள் செய்து தவறான வாக்குமூலம் வாங்க நினைத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
என் நண்பர்களில் ஏராளமானோர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு 8 மாதங்கள் தாண்டிவிட்டது. பாஜக இன்றுவரை அவர்களை விடவில்லை. அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கியதற்கு நேர்மையான பதிலும் வரவில்லை. ஆதலால், அவர்கள் தொழில் முடங்கி வாழ்வதற்குப் போராடும் அவலத்தை நீங்கள் அறிவீர்களா? நாங்கள் பலவற்றை சொல்லிக்காட்ட விரும்பவில்லை.
தியாகம் அனைவரிடத்திலும் உள்ளது. அதனை சொல்லிக் காட்ட விரும்பவில்லை. நாங்கள் உங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. நாங்கள் உங்களிடம் எந்தவித பதவியையும் எதிர்பார்க்கவில்லை. நானும், திவாகரனும் டிடிவி தினகரன்தான் முதல்வர் என்று அனைத்து பொதுமேடைகளிலும் இன்றுவரை கூறி வருகிறோம். நாங்கள் இதுவரை பொதுமேடைகளில் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், ஒருசில விஷயங்களில் மாற்றுக் கருத்து இருப்பதையும் மறைக்கவும் இல்லை.
அதிகபட்சமாக நாங்கள் எதிர்பார்ப்பது சக மனிதனுக்கு கொடுக்கும் மரியாதையை மட்டுமே. பல மாதங்களாக மறைமுகமாக, திரைமறைவில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்து வருகிறோம். அதைப்பற்றிக் கூற விரும்பவில்லை. எதற்கும் ஆசைப்படாத எங்களுக்கு கையில் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மரியாதை கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், ஒன்று மட்டும் நான் நன்கு அறிவேன். யாரோ எழுதிய அறிக்கை உங்கள் பெயர் போட்டு வெளிவந்திருக்கிறது. உங்கள் மனசாட்சிக்கு அது தெரியும் என்று நம்புகிறேன்.
திவாகரனின் தற்போதையை நிலையைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒரு குட்டிக்கதை மட்டும் சொல்கிறேன். 15 மற்றும் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ எனும் விஞ்ஞானி பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்றார். ஆனால், கிறிஸ்தவ சமயத்தினர் சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது. பூமி நிற்கிறது என்று நம்பினர். அவர்கள் நம்பிக்கைக்கு எதிராகப் பேசியதாக கலீலியோவை கற்களால் அடித்தனர். பிறகு அவர் இறந்துவிட்டார். கலீலியோ மறைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்ற உண்மை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபணமானது. அவர் இருக்கும்போது சொல்லிய உண்மை இறந்த பின்பு உலகம் அறிந்தது.
ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். 'சின்னம்மா' என்ற ஒற்றை வார்த்தைக்காக நாங்கள் எதையும் பொறுத்துக் கொள்வோம்'' என்று தெரிவித்துள்ளார்.