தமிழ்நாட்டில் வேகமெடுத்து வரும் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 13 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக வெளிநாடுகள்,வெளி மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் உள்பட, தமிழகம் முழுவதும் புதிதாக 13 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 8 ஆயிரத்து 432 பேர் ஆண்களும், 5 ஆயிரத்து 344 பேர் பெண்களும் ஆவர்.
சென்னையில் 3 ஆயிரத்து 842 பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 934 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 985 பேரும், கோவை மாவட்டத்தில் 889 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 807 பேரும், நெல்லை மாவட்டத்தில் 517 பேரும், மதுரை மாவட்டத்தில் 502 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில், மொத்த பாதிப்பு 10 லட்சத்து 51 ஆயிரத்து 487 ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 44 ஆக உள்ளது. தற்போது, 95 ஆயிரத்து 48 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.