சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார், சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா கும்பத்திற்குள் பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டது முதல் தினகரன் தரப்பும், திவாகரன் தரப்பும் மாற்றி மாற்றி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனது முகநூல் பக்கத்தில், “மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில், “எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திரு. திவாகரனும், ஜெய் ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.
தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதிர்கள்… நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்” என்று தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து திவாகரன், “கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நானும் எனது மகனும் ஈபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது” என்று தெரிவித்து இருந்தார்
இந்நிலையில், இது குறித்து கும்பகோணம் அருகே சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியில் அண்ணா இல்லை என்று காழ்ப்புணர்ச்சியால் திவாகரன் பேசுகிறார். உறவு என்பது வேறு, கட்சி என்பது வேறு என்றும் கட்சியை தனிநபராக ஆட்டிப்படைக்க திவாகரன் நினைக்கிறார்.
எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் செய்த திவாகரன், எஸ்.டி.எஸ் [எஸ்.டி.சோமசுந்தரம்] தனிக்கட்சி தொடங்கிய போது அவருடன் பணியாற்றினார். சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார், சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும்.
பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை பார்க்காதவர் திவாகரன். சசிகலாவை எதிர்க்க முடியாதவர்கள் என்னை எதிர்க்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கிறேன்; அதற்காக அவர்களுக்கு கட்டுப்பட முடியாது. உறவினர்களிடம் அரசியல் பற்றி பேச முடியாது. கட்சி தொடர்பாக திவாகரனிடம் பேசியது கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.