ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு முன்கூட்டி விடுதலை இல்லை!

by Lenin, Apr 27, 2018, 12:52 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014ல் தீர்மானம் நிறைவேற்றியது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், 20 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய, 1994ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நளினி கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, 2016ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஏப்ரல் 23ல் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசியல் சாசனம் 161ன்படி கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்று விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து (இன்று) 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், உயர்நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. இதனால் முன்கூட்டியே நளினியை விடுதலை செய்யும்படி உத்தரவிட முடியாது. மேலும் நளினி தொடர்ந்த மேல்முறையிட்டு மனுவை நிராகரித்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு முன்கூட்டி விடுதலை இல்லை! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை