பாம்பிற்கு பால் வார்த்துவிடேன். அதற்காக அதிமுகவினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரனை சசிகலா சகோதரர் திவாகரன் சாடியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டது முதல் தினகரன் தரப்பும், திவாகரன் தரப்பும் மாற்றி மாற்றி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனது முகநூல் பக்கத்தில், “மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில், “தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதிர்கள்… நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்” என்று தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து திவாகரன், “கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நானும் எனது மகனும் ஈபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது” என்று தெரிவித்து இருந்தார்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை பார்க்காதவர் திவாகரன். சசிகலாவை எதிர்க்க முடியாதவர்கள் என்னை எதிர்க்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கிறேன்; அதற்காக அவர்களுக்கு கட்டுப்பட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சசிகலா குடும்பத்திற்குள் மாற்றி மாற்றி அறிக்கைகள் விட்டு மோதி வருகின்றனர். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு திவாகரன் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய திவாகரன், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், தினகரன் பல சதிகளை செய்தார். ஜெயலலிதாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது ராகுல் காந்தி, பிரதமர் மோடி என அனைவரும் அஞ்சலி செலுத்த வந்தனர்.
அப்போது, ‘சசிகலா என்னை சந்திக்க விரும்புகிறாரா? நான் தயராக இருக்கிறேன்’ என மோடி கேட்டார். ஆனால், அது தேவையில்லை என தினகரன் கூறிவிட்டார். அதன் பின்புதான் எங்களுக்கு அது தெரியவந்தது.
அதேபோல், ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்து 3 பக்கம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், மோடிக்கு சிறிய கடிதம் அனுப்பப்பட்டது. இது டெல்லியில் உள்ள தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது அனைத்தும் தினகரன் திட்டமிட்டு செய்த சதி” என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “சசிகலாவை தினகரன் தவறாக வழி நடத்தினார். அது தெரியாமல் அவரை ஆதரித்தேன். பாம்பிற்கு பால் வார்த்துவிடேன். அதற்காக அதிமுகவினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் நான் தனி அணியாக செயல்படுவேன். அவர் சாகடித்த அதிமுகவிற்கு உயிர் ஊட்டுவேன்” என்று தெரிவித்துள்ளார்.