அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அடுத்த மாதம் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக-வின் துணை பொதுச்செயலாளராக தினகரன் பதவியேற்ற பின்னர் அரசியல் களத்தில் தொடர்ந்து மாற்றங்கள் நடந்து வருகின்றன.
இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதானது, மீண்டும் அணிகள் இணைப்பில் மும்முரம் காட்டியது, ஸ்லீப்பர் செல்களை வைத்து அச்சுறுத்தியது, ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி, அமமுக தொடங்கியது, திவாகரனுடன் மறுபடியும் பிரச்சினை என கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக இருந்து வருகிறார் தினகரன்.
இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக அடுத்த மாதம் 6-ம் தேதி தேனி மாவட்டம், பொட்டிபுரம் ஊராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னர் மோடியின் தமிழக வருகையின் போது `கருப்புக் கொடி காண்பிக்கும் போராட்டத்தில்’, தினகரன் பங்கேற்காமல் நழுவினார்.
இதனால், மத்திய அரசுக்கு தினகரன் பணிந்துவிட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில்தான் நியூட்ரினோவுக்கு எதிரான போராட்டத்தை தேனி மாவட்டத்திலேயே நடத்த உள்ளார் தினகரன். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசையும், எடப்பாடி தலைமையிலான மாநில அரசையும் கடுமையாக சாடியுள்ளார்.