ராஜஸ்தானின் கிழக்கு பகுதியான தோல்பூர் மற்றும் ஆல்வார், பரத்பூர் மாவட்டங்களில் புழுதி புயல் வீசியது. தொடர்ந்து வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்தன. ஏராளமான மின்கம்பங்கள் சாலைகளில் சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன.
பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்று வீசுவதால் மக்களில் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புழுதிப் புயலுடன் மழையும் பெய்து வருகின்றது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் பல விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க படவில்லை.
புழுதி புயல் பாதிப்பில் சிக்கி 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புழுதி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கும் படி மாநில அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.