காவலர் ஜெகதீஸ் கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய் - வைகோ

காவலர் ஜெகதீஸ் துரை கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்க

by Rekha, May 7, 2018, 19:50 PM IST

தமிழக அரசும், நெல்லை மாவட்டக் காவல்துறையும் விரைந்து செயல்பட்டு காவலர் ஜெகதீஸ் துரையின் படுகொலைக்குக் காரணமானவர்களை கைது செய்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை மாவட்டம், நான்குநேரி - பரப்பாடி பகுதியில் நள்ளிரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்பட்டு வருகிறது என்றும், அதைத் தடுக்க சம்பவ இடத்திற்கு உடனடியாகப் புறப்பட்டுச் செல்லுமாறும் விஜயநாராயணம் காவல்நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் (06.05.2018) இரவு விஜயநாராயணம் காவல் நிலைய உளவுப் பிரிவு காவலர் ஜெகதீஸ் துரை சென்றுள்ளார்.

மணல் கடத்தல் கும்பல் தாக்கியதில் காவலர் ஜெகதீஸ்துரை கொல்லப்பட்டதாக இன்று (07.05.2018) காலை சுமார் 6 மணி அளவில் அவரது துணைவியார் திருமதி மரியரோஸ் மார்க்ரெட் அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

காவல்துறையும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனை அருகில் சிந்தாமணி கத்தோலிக்க சபை அருட் தந்தை குழந்தை ராஜன்  தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் சிந்தாமணி சுற்றுவட்டார மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசும், நெல்லை மாவட்டக் காவல்துறையும், விரைந்து செயல்பட்டு, காவலர் ஜெகதீஸ் துரையின் படுகொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்திட வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் கோரிக்கைகள் எழுத்து மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொலையுண்ட 32 வயது நிரம்பிய காவலர் நேர்மையாகப் பணியாற்றக் கூடியவர். அவருக்கு மூன்று வயதில் ஜோயல் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவனை இழந்துவிட்ட சகோதரி மரியரோஸ் மார்க்ரெட் 5 மாத கர்ப்பிணி என்பது இதயத்தைப் பிளக்கும் சோகச் செய்தியாகும்.

தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், தனது கணவர் காவல்துறையில் உள்ள சில அலுவலர்களாலும், சட்ட விரோத மணல் கடத்தல் கும்பலாலும் பணியின் போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்குக் காரணமான குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அப்பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகள் கைது செய்யப்பட வேண்டும்.

தமது கணவர் பணியில் வீர மரணம் அடைந்ததாகக் கருதி, குடும்பப் பாதுகாப்பு நிதி ஒரு கோடி வழங்கிட வேண்டும். எம்.காம்., பி.எட். படித்துள்ள தமக்கு அரசு ஆசிரியை பணி வழங்கிட வேண்டும்.தமது மகன் ஜோயல் மற்றும் வயிற்றில் இருக்கும் தமது குழந்தையின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட எழுத்துபூர்வமாக தங்களுக்கு உறுதி அளிக்க வேண்டும் எனவும் திருமதி மரியரோஸ் மார்க்ரெட் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். காவலர்  குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த 10 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகை ஏற்கத்தக்கது அல்ல, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட உத்தரவிட வேண்டும்.

கணவரைப் பறிகொடுத்த இளம் விதவை திருமதி மரியரோஸ் மார்க்ரெட் தெரிவித்துள்ள கோரிக்கைகள் முழுவதையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க., சார்பில் வலியுறுத்துகிறேன்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading காவலர் ஜெகதீஸ் கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய் - வைகோ Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை