விஷால் அரசியல்... ஆரம்பமா... அஸ்தமனமா...?

Dec 6, 2017, 22:07 PM IST

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு 62 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது, விஷால், ஜெ.தீபா உள்பட 54 பேரின் மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. பெரிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெற்ற பிறகு களத்தில் இருப்போரின் எண்ணிக்கை மேலும் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Vishal 

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் ஜெ.தீபா பெரிதாக ஒன்றும் கவலை பட்டதாக தெரியவில்லை, அதிமுக தோற்றுவிடும் என்பதால் எனது வேட்புமனுவை நிராகரித்திருக்கிறார்கள் என்று, தனது ஆதங்கத்தை தெரிவித்ததோடு முடித்துக் கொண்டார்.

ஆனால் அதற்கு நேர்மாறாக நடிகர் விஷால் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் மும்முறமாக இறங்கியுள்ளார்,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு விஷால் டுவிட்டரில் வேட்புமனு நிராகரிப்பு குறித்து விவரித்துள்ளார். மேலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லகானியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.

மற்ற சுயேட்சை வேட்பாளர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய மனு மட்டும் பரிசீலினை செய்யும்போது நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டதாகவும், தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதாகவும், தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தார்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விஷாலிடம் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக அவர், ராஜேஷ் லகானியிடம் அளித்துள்ள மனுவில், ராஜேஷ் லகானி, தேர்தல் ஆணையர் என்றும், மாநில தேர்தல் ஆணையம், அரும்பாக்கம் என்றும் முகவரி குறிப்பிட்டிருந்தார், விஷால் புகார் அளித்ததோ தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத்தேர்தல்களுக்கான அதிகாரியிடம். ஆனால், புகார் மனுவில் இடம்பெற்றிருந்ததோ மாநில தேர்தல் ஆணையரின் கோயம்பேடு முகவரி என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்தல்கள் நடத்துவது யார், உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவது யார் என்ற குறைந்தபட்ச வித்தியாசம் கூட தெரியாமலா விஷால் தேர்தலில் போட்டியிட வந்தார் என்று சமூக வளைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. 

மேலும், அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் கொடுக்க உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் கருத்துகள்:-

“வேட்பாளர்கள் தங்களின் சாியான ஆவணங்களை தாக்கல் செய்தால், தேர்தல் ஆணையம் வேட்பு மனுவை நிராகரிக்காது” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Vishal

“விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது நல்லதுதான்” என்றும், “தேர்தல் ஆணையத்தை குறைகூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

“நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்தான் நடிகர் விஷால் என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்

“நடிகர் விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டபின் நள்ளிரவில் நீக்கியது ஏன்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்

“விஷால் ஒரு குளத்து ஆமை மாதிரி, நல்ல இடமாக இருந்தால் அங்கு சென்று அந்த இடத்தை கெடுத்துவிடுவார். அரசியல் ரொம்ப கஷ்டமானது. எனவே தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேவையானவற்றை அவர் செய்ய வேண்டும் என்பதே விஷாலுக்கு தனது அறிவுரை. அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்” என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

“மக்களுக்காக உழைப்பேன், ஊழலை எதிர்ப்பேன் என்று சொன்ன வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் உண்மையான பச்சோந்தியை மக்கள் இப்போது பார்க்கிறார்கள். அதுவும் கையெழுத்தில் மோசடி என்பதற்காக. உண்மையான வண்ணத்தை அனைவரும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், “விஷால் வேட்புமனு தாக்கல் செய்யும் முன்னரே விஷால் பற்றி ஒரு நிருபர் கேட்டபோது ஒரு அரிய கருத்தை கூறியிருந்தார், அதாவது, எத்தனையோ சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள், அதுபோல் விஷாலும் ஒரு சுயேச்சை வேட்பாளர்தான். எனவே சுயேச்சை வேட்பாளர்கள் குறித்து எந்த கருத்தும் சொல்ல முடியாது. சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். இன்னும் வேட்புமனு தாக்கல் செய்ய குறுகிய நேரம் உள்ளதால் இதை நிர்வாக ரீதியாக எப்படி சமாளிப்பார் என்று தெரியவில்லை" என்று கூறியிருந்தார்.

அவர் சுயேட்சை சுயேட்சை என்று பல முறை கூறியது, நிராகரிக்கப்பட்ட 54 சுயேட்சை வேட்பாளர்களில் விஷாலும் அடங்குவார் என்பதை முன்கூட்டியே தமிழிசை உணர்த்தியுள்ளார் என்பது இப்போதுதான் நமக்கு புரிகிறது.

இவ்வாறு அரசியலில் பல எதிர்மறை கருத்துகள் விஷாலை படமெடுக்கும் பாம்பாய் சுற்றி நிற்கின்றன,

ஆளுநரை சந்தித்த பின் என்ன நடக்கும்?
ராஜேஷ் லகானியுடனான சந்திப்பு என்ன பலனைத் தரும்?
இந்த பிரச்சனையிலிருந்து வென்று வருவாரா? அல்லது அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதற்கு முன் 'ரஜினியும், கமலும் நின்று நிதானமாக யோசித்து, அரசியலின் ஆழத்தை அளந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலே', இப்படி எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அவசரப்பட்டு இறங்கி முட்டி-மோதி திரும்பி நிற்கும் விஷாலின் இந்த நிலை, நாளைக்கு அரசியல் கட்சி தொடங்க நினைக்கும் சினிமா பெரும்புள்ளிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

You'r reading விஷால் அரசியல்... ஆரம்பமா... அஸ்தமனமா...? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை