பிரபல எழுத்தாளர் பாலகுமாரன், அவருக்கு வயது 71. நேற்றிரவு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பாலகுமாரனின் உயிர் பிரிந்தது.
தஞ்சை மாவட்டம் திருகாட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் 1946-ஆம் ஆண்டு பிறந்தவர் பாலகுமாரன். எழுத்துலகில் தனி முத்திரை பதித்த பாலகுமாரன், பன்முக திறமைக் கொண்டவர். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 250க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார்.
இரும்புக்குதிரை, மெர்க்குரிப்பூக்கள் ஆகியவை அவர் எழுதிய புகழ்பெற்ற நாவல்களாகும். நாயகன், பாட்ஷா, குணா, ஜென்டில்மேன், ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு பாலகுமாரன் வசனம் எழுதியுள்ளார்.
கலைமாமணி விருது, காதலன் படத்திற்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான மாநில அரசு விருது பெற்றுள்ளார். பாலகுமாரனின் மறைவு தமிழ் எழுத்துலகிற்கு பேரிழப்பு என எழுத்தாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.