தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலத்தில் இருந்த வாக்கி டாக்கி மாயமாகியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள காமராஜர் சாலையில் உள்ளது டி.ஜி.பி அலுவலகம். இங்கு பாதுகாப்பு பணியில், தமிழ்நாடு சிறப்பு படை காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். 5 மாதத்திற்கு ஒருமுறை இந்த காவலர்களை மாற்றம் செய்வது வழக்கம்.
அதன்படி, கடந்த 11-ஆம் தேதி முதல் சி-கம்பெனி சிறப்பு காவல்படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. காவலர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டது. அப்போதுதான் ஒரு வாக்கி டாக்கி மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து தமிழ்நாடு சிறப்பு படை காவல் ஆய்வாளர் மயில்வாகனன், மெரினா காவல் நிலையத்தில் வாக்கி டாக்கி காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து மெரினா போலிசார் விசாரணை செய்து வருகின்றனர் .
ஏற்கெனவே பணியில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், கடைசியாக பயன்படுத்திய காவலரை கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.