தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்ததையடுத்து, உயரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் நூறாவது நாளில் பெரியளவில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பின்னர் வன்முறையாக வெடித்தது. அப்போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள், திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து, துப்பாக்கிச்சூடு கண்டித்து நேற்றும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றன. உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் துப்பாக்கிசூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இவர்களை போலீசார் கலைக்க முயன்றபோது மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு போலீசார் மீண்டும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயமடைந்தனர். இதனால், அங்கு மீண்டும் பதற்றநிலை காணப்பட்டது. தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூப்பாக்கு குண்டுகள் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதன் மூலம், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com