'ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு’ எனக் கூசாமல் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளதாகத் தூத்துக்குடி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் கடந்த நூறு நாள்களுக்கு மேலாக விடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு நாள்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் போராடும் மக்களை ஒடுக்க தமிழகக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதில் 10 பேர் பலியாகினார். பலர் காயமடைந்தனர். போராட்டத்தைக் கலவரமாக அறிவித்த அரசு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விதித்தது. இதன் பின்னரும் மக்கள் போராட்டம் ஓயவில்லை.
தொடர்ந்து தூத்துக்குடியிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் நேற்று தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடில் போலீஸ் ஈடுபட்டது. இதில் இரண்டு பேர் பலியாகினர்.
தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள ‘மனிதம்’ நிறைந்த மனிதர்கள் யாவரும் வருந்தி வேதனையில் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் 12 பேரின் படுகொலைகளுக்குப் பின்னர் நிதானமாகப் பேட்டியளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
அவர் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைபாடு மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு என்றும் அனுமதி கிடையாது. தூத்துக்குடி மக்களை நிச்சயம் சந்திப்போம்” எனக் கூறியுள்ளார்.
’புதைத்த இடங்களில் பால் ஊற்றவா அமைச்சர் விரைவில் எங்களை வந்து சந்திக்கிறார்?’ என உச்சக்கட்ட கொந்தளிப்பில் உள்ளனர் தூத்துக்குடிவாழ் மக்கள்.
நிலைப்பாடுகள் ஆரம்பிக்கும் முன்னர் இருக்க வேண்டும். அனைத்தைஉம் செய்து முடித்த பின்னர் நிலைப்பாடு எடுத்தால் என்ன? கூப்பாடு போட்டால் என்ன? இழந்த உயிர்கள் எந்த நிலைப்பாடுகளின் கீழ் வரவு வைக்கப்படுமாம்?