தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொகையில் இருந்து உயர்த்தி ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மக்கள் பெரிய அளவில் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதற்கு மற்ற கட்சிகள் மற்றும அமைப்புகள் இழப்பீடு போதாது, அதனை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இழப்பீடு தொகையில் இருந்து கூடுதலாக ரூ.10 லட்சம் உயர்த்தி, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சத்திற்கும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தியும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com