தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் அறகமுப்படுத்திய ப்ளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ப்ளஸ் 1 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. ஏற்கனவே, 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை இயக்குநரகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை 9 மணியளவில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 91.3 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகளில் 94.6 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 2,724 அரசு பள்ளிகளில் 188 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 97.3% பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை, http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in ஆகிய இணையத்தளங்களில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஜூன் 2, 4ல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- thesubeditor.com