தூத்துக்குடியில், துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கி ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 அப்பாவிகள் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர், கடந்த 27ம் தேதி காலை 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இதைதொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் சிலர் துப்பாக்கிச் சூடில் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக தூத்துக்குடி பயணம் இன்று மேற்கொண்டார். அங்கு, துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பேசினார். பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கினார்.
இதில், முதற்கட்டமாக 9 பேருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கினார். இதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் கூறுகையில், “மக்களின் அமைதியான போராட்டத்தின் போது சமூக விரோதிகளால் வன்முறை வெடித்தது. இதில், அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஜெயலலிதான அதனை சரியாக செய்திருந்தார். ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்கவே கூடாது ” என்றார்.