ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி என்று பெயரிடப்பட்டுள்ள புதிய கட்சியை தொடங்கினார்.
தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கர்ணன். இவர், அவ்வபோது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை கூறி வந்ததை அடுத்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். தண்டனை பெற்று பின்னர் விடுதலையானார்.
இந்நிலையில், கர்ணன் ஏற்கனவே அறிவித்தபடி ‘ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி’ என்று பெயரிடப்பட்ட புதிய கட்சியை இன்று தொடங்கினார்.
இதன் தொடக்க விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
விழாவில் கர்ணன் பேசியதாவது: நம் நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காக புதிய கட்சியை தொழடங்கியுள்ளேன். அரசு துறையில் ஊழல் மலிந்துவிட்டது. ஊழலை ஒழித்து ஜனநாயகத்தை பாதுகாப்போம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்று பெற்று ஆட்சி அமைப்போம். எங்கள் கட்சியில் தொண்டர்கள் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் மக்களின் ஆதரவு எங்களுக்கு அதிகமாக உள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.
இனி வரும் நாட்களில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை தேர்வு செய்வோம். கட்சி அலுவலகங்களையும் திறப்போம். ஜாதி, மதம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் எங்கள் கட்சியில் இணைய ஆர்வமாக உள்ளனர். கட்சிக்கு தேவையான நிதியை யாரிடமும் திரட்ட மாட்டேன். நானே எனது பணத்தை செலவு செய்வேன். மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால் ஏற்றுக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.