அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தமிழக அரசு சலுகை ஒன்றை வழங்கி அறிவித்துள்ளது.
அரசு துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் சக ஊழியர்கள் அலுவலகம் பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பும்போது கிளம்பினால் கூட்ட நெரிசல், போக்குவரத்து பயணத்தின்போது இடையூரு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதனால் இவர்கள் பெறும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் 15 நிமிடம் முன்பே செல்வதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் குறித்புரை கேட்டபோது, பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக வீட்டுக்கு செல்ல அனுமதி வழங்கலாம் என பரிந்துரை செய்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தைவிட்டு செல்ல அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. இந்த சலுகை குறித்து தலைமைச் செயலக அலுவலக நடைமுறை மற்றும் அரசு அலுவலக நடைமுறை நூல்களுக்கு தக்க திருத்தம் செய்து பின்னர் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.