கடந்த வெள்ளிக் கிழமை, கோயம்புத்தூரில் 'புதிய தலைமுறை' செய்தி தொலைக்காட்சி சார்பில் அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் பங்கேற்ற ஒரு விவாத நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் அமீர், சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எம்.எல்.ஏ செம்மலை, தி.மு.க-வின் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் அடிப்படை உரிமைக்காகவா? அரசியல் காரணங்களுக்காகவா? என்ற ரீதியில் விவாதம் நடைபெற்றது. முதலில் தமிழிசை, `அரசியல் காரணங்களுக்காகவே' என்ற தலைப்பில் பேசினார். பின்னர் கே.பாலகிருஷ்ணன் `அடிப்படை உரிமைக்காவே?' என்ற தலைப்பில் பேசி தமிழிசை கருத்துகளுக்கு எதிராக வாதிட்டார்.
பின்னர் வந்த அமீர், பேச ஆரம்பித்த போது, பலர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். கூட்டத்தை நெறிபடுத்த, புதிய தலைமுறையின் நெறியாளர் கார்த்திகைச் செல்வன் எவ்வளவோ முயன்றார். ஆனால், கோஷமிட்டவர்களை அவரால் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால், நிகழ்ச்சி பாதியிலேயே கைவிடப்பட்டது.
இதையடுத்து, அரங்கத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் `புதிய தலைமுறை' செய்தி நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இது மட்டுமல்லாமல், இயக்குநர் அமீர் மீதும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அமைப்புகளும் இந்த வழக்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மதிமுக தலைவர் வைகோ, `ஊடகத்தின் கருத்து சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயம் இந்த வழக்கு' என்று கருத்த தெரிவித்துள்ளார். இதையொட்டி மெட்ராஸ் பத்திரிகையாளர்கள் கில்ட், `ஊடகத்தின் சுதந்திரத்தை மட்டும் இந்த வழக்கு கேள்விக்கு உட்படுத்தவில்லை. பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கும் இது மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.