தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கி தமிழகம், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்ததுபோல், கோவை, நெல்லை, நீலகிரி, திண்டுகல் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கு மரங்கள் சாய்ந்தன.
மேலும், கோவையில் பீளமேடு, காந்திபுரம், சிங்காநல்லூர், அவிநாசி சாலை, சூளூர், கவுண்டன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் 4வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோவையில் உள்ள பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு 4வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.