பேனர் வைக்க அனுமதி அளிக்கும் அரசின் நடைமுறையை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உயிரோடு இருப்பவர்களுக்கு கட்-அவுட், பேனர் பேன்றவற்றை வைக்க கடந்த அக்டோபர் 22ம் தேதி உயர்நீதிமன்ற தனி நீதிபதி வைத்தியநாதன் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதிகள், சிவஞானம், ரவிச்சந்திரபாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தனி நீதிபதி உத்தரவில் உயிரோடு இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் உள்ளிட்டவை வைக்கக்கூடாது என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என கோரினார். ஏனெனில் வர்த்தக ரீதியான விளம்பரங்கள் செய்ய முடியாமல் உள்ளது. இதனால், சென்னை மாநகராட்சியின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே பேனர், கட் அவுட்கள் வைக்க அனுமதிப்பதா? என நீதிபதி கேள்வி எழுப்பியதோடு, இந்த விளம்பர பதாகைகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.
மேலும், கட் அவுட், பேனர் வைக்க அனுமதி அளிக்கும் அரசின் நடைமுறையை மறு ஆய்வு செய்யும் நேரம் வந்துவிட்டதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கேரளாவில் தேர்தல் நேரத்தில் மட்டுமே பேனர் வைக்கிறார்கள். அதுவும் மூங்கிலில் வைக்கின்றனர், தமிழ்நாட்டில் அந்த போன்று இல்லை, தற்போது அதை கட்டுபடுத்த நேரம் வந்துள்ளது என நீதிபதிகள் கூறினர்.
இதனையடுத்து எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்காமல், வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரிப்பதற்காக வரும் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.