நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத காரணத்தால் இந்த ஆண்டு மட்டும் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்நிலையில், இது குறித்து தமிழக அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மருத்துவ கல்வி படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. நீட் தேர்வுக்கு தனியாக பயிற்சி எடுக்க வேண்டும் என்ற காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்த நிலையில் உள்ளது.
சென்ற ஆண்டு அனிதா என்ற அரியலூரைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டும் திருச்சி மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த இரண்டு தமிழக மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்து கொண்டனர்.
இது நீட் தேர்வு குறித்து விசாரித்த நீதிமன்றம், 'நீட் தேர்வால் நிகழ்ந்த மரணங்கள் குறித்து தமிழக அரசு இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசு மட்டும் மாணவர்களின் மரணத்துக்கு பொறுப்பாக முடியாது. அவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிற பெற்றோர்களும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றனர்’ என்று தெரிவித்துள்ளது.