ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் வெளிநடப்பு!

by Rahini A, Jun 25, 2018, 12:57 PM IST

”ஆளுநர் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபடுவார் என்றால் கருப்புக்கொடி போராட்டம் தொடரும்” என திமுக-வின் செயல்தலைவரும் தமிழக சட்டசபையின் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தான் பதவியேற்ற நாளிலிருந்தே தனது நடவடிக்கைகளால் தமிழக எதிர்கட்சிகளின் கண்டனங்களுக்குத் தொடர்ந்து உள்ளாகி வருகிறார்.

தமிழகத்தில் திடீரென ஒரு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு ஆட்சியர் அலுவலகம் முதல் ஊராட்சி வரையில் ஒரு இடத்துக்குச் சென்று நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். இதுவரையில் எந்த ஒரு ஆளுநரும் ஈடுபடாத செயல்களில் எல்லாம் தலைகொடுத்து வருகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

கோவையில் முதன்முதலாகத் தொடங்கிய ஆய்வு நடவடிக்கைகள் தற்போது நாமக்கல் வரையில் வந்துள்ளது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் குறித்தும் அவரது நடவடிக்கைகள் குறித்தும் சபையில் பேச அனுமதி கேட்ட ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சபையில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆளுநர் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபடுவார் என்றால் கருப்புக்கொடி போராட்டம் தொடரும் மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார். மாநில சுயாட்சியை நிறுவ ஏழு ஆண்டுகள் அல்ல, ஆயுள் முழுக்கவும் சிறையில் இருக்கத் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.

You'r reading ஆளுநருக்கு எதிராக ஸ்டாலின் வெளிநடப்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை