ஆசிரியர் பகவானுக்கு டிரான்ஸ்பர் இல்லை: மாணவர்கள் உற்சாகம்

by Isaivaani, Jun 27, 2018, 09:24 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களின் பாசப் போராட்டத்தால், ஆசிரியர் பகவானுக்கு பணி இட மாற்றத்தை ரத்து செய்து, அதே பள்ளியில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரன் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பகவான் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். ஆங்கில ஆசிரியரான இவர் கடுமையான ஆசிரியராக இல்லாமல், மாணவர்களோடு மாணவராக இணைந்து பாடம் கற்பித்து வந்துள்ளார். இதனால், மாணவர்களுக்கு பகவான் ஆசிரியர் என்றால் மிகவும் பிரியம்.

இந்நிலையில், பகவான் ஆசிரியரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தணியை அடுத்த அருங்குள் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதனால், தான் பணிபுரிந்து வரும் பள்ளியில் பணி விடுவிப்பு கடிதம் பெற்று திரும்பிய பகவானை மாணவர்கள் அனைவரும் வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என்று வழிமறித்து கதறி அழுதனர்.

அப்போது, மாணவர்களையும் ஆசிரியர்களையும் சமாதானப்படுத்த அப்பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்த், பகவானுக்கு வழங்கிய பணி விடுப்பு கடிதத்தை அவர்கள் முன்னே கிழித்து எறிந்தார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் வைரலாக பரவியது.

இதன் பிறகு,  ஆசிரியர் பகவான் அந்த பள்ளியில் 10 நாட்களுக்கு பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் பகவானுக்கு கடந்த சனிக்கிழமை பணி விடுப்பு கடிதம் வழங்கப்பட்டதை அடுத்து, அவர் அருங்குளம் பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்துவிட்டார்.

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாசப் போராட்டத்தினாலும், அவர்களை விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஆசிரியர் பகவான் வெளியகரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் மாற்று பணியில் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ஆசிரியர் பகவான் கடந்த திங்கட்கிழமை முதல் வெளியகரம் பள்ளியிலேயே தனது பணியை தொடங்கினார். இதனால், மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

You'r reading ஆசிரியர் பகவானுக்கு டிரான்ஸ்பர் இல்லை: மாணவர்கள் உற்சாகம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை